< Back
மாநில செய்திகள்
2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
26 Oct 2023 12:45 AM IST

மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை

மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழந்தைக்கு மொட்டை

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் கொங்குநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லஷிகா (23). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் லஷிகா தனது கணவரிடம் குழந்தையை சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடிவெட்டி வரும்படி கூறினார். அதற்கு அவர், பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட வேண்டி உள்ளது. எனவே தற்போது முடி வெட்ட வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

குழந்தைக்கு விஷம் கொடுத்து...

இதனால் லஷிகா தனது குழந்தைக்கு அவரே முடியை வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கார்த்திகேயன் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வெளியே சென்றார்.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த லஷிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இருந்தாலும் அவருக்கு தனது 2 வயது குழந்தையை விட்டுச்செல்ல மனம் இல்லை. இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு அவரும் குடித்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சிறிது நேரம் கழித்து 2 பேரும் வாந்தி எடுத்தனர். உடனே அவர் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு 2 பேரும் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் பதறிபோன கார்த்திகேயன் விரைந்து சென்று, மனைவி மற்றும் குழந்தையை மீட்டு கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


மேலும் செய்திகள்