விழுப்புரம்
விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குழு ஆய்வு
|முதல்-அமைச்சரின் கள ஆய்வையொட்டி விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குழு இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்
விழுப்புரம்
முதல்-அமைச்சர் வருகை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 26, 27-ந் தேதிகளில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர், 26-ந் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் வருகை தருகிறார்.
இதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த 3 மாவட்டங்களும் கிராமப்புறங்களை கொண்டுள்ளதால் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கொண்ட குழு, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 2 நாட்கள் நேரடியாக ஆய்வு செய்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சருக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
அதிகாரிகள் குழு ஆய்வு
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பிரசாந்த் தலைமையில், தலைமை பொறியாளர் குற்றாலிங்கம், செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், உதவி இயக்குனர் சாந்தி, கண்காணிப்பாளர் பாரதி ஆகியோரும், கடலூர் மாவட்டத்தில் கூடுதல் இயக்குனர்கள் ஆனந்தராஜ், குமார், இணை இயக்குனர் ஸ்ரீதேவி, உதவி பொறியாளர் சிவகாந்த், கண்காணிப்பாளர் செல்வசுந்தரி ஆகியோரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் இயக்குனர்கள் சாமுவேல்இன்பதுரை, ராஜஸ்ரீ, கண்காணிப்பு பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் கற்பகம், கண்காணிப்பாளர் வசந்தி ஆகியோரும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இக்குழுவினர் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை) 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சித்துறை கட்டிட பணிகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராம சாலை திட்டம், ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து அப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சருக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் வழங்குவார் என்று கூறப்படுகிறது.