< Back
மாநில செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு  இன்று ஆய்வு
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு

தினத்தந்தி
|
22 Aug 2022 3:16 AM GMT

கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனைத்தொடர்ந்து விளக்கம் தர கேட்கப்பட்ட 27 கேள்விகளுக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்கள் விரிவான விளக்கமளித்து பதில் அனுப்பினர். அதில், சிதம்பரம் கோவில் நிதி முறையாக பயன்படுத்தப்படுவதாகவும், கோவில் நிதியை பயன்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக செயல்படுவதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆதரவாக வரப்பெற்ற ஆயிரக்கணக்கான கடிதங்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட வேண்டும் என தீட்சிதர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதனையடுத்து நகை சரிபார்ப்புக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளனர். தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்