< Back
மாநில செய்திகள்
கொடைக்கானலில் வெளிநாட்டு என்ஜினீயர்கள், அதிகாரிகள் குழு ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கொடைக்கானலில் வெளிநாட்டு என்ஜினீயர்கள், அதிகாரிகள் குழு ஆய்வு

தினத்தந்தி
|
11 Oct 2022 6:45 PM GMT

கொடைக்கானல்-பழனி இடையே ரோப் கார் சேவை தொடர்பாக வெளிநாட்டு என்ஜினீயர்கள், அதிகாரிகள் குழுவினர் நேற்று கொடைக்கானலில் ஆய்வு செய்தனர்.

ரோப் கார் திட்டம்


நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-பழனி இடையே ரோப் கார் சேவை திட்டமும் ஒன்று. இந்தநிலையில் முதற்கட்டமாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் பழனி பகுதியில் ஆய்வு நடத்தியது.


இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் குழுவினர் நேற்று கொடைக்கானலுக்கு வந்தனர். அப்போது கொடைக்கானலில் நிலவும் காலநிலை, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சுற்றுலா அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


இதில் ஆஸ்திரியா நாட்டு வல்லுனர் குழுவினருடன், திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கர சுப்பிரமணி, கொடைக்கானல் உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் பரதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.


விரைவில் பணிகள்


பின்னர் அதிகாரிகள் குழுவினர், கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட‌ கோவில்பட்டி, நகரில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட ப‌ல்வேறு இடங்க‌ளிலும், ம‌லைப்ப‌குதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.


இதுகுறித்து வெளிநாட்டு என்ஜினீயர்கள் குழுவின‌ர் கூறுகையில், கொடைக்கானல்-பழனி இடையே ரோப் கார் சேவை திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கொடைக்கானலில் இருந்து பழனிக்கு இடையே 12 கிலோ மீட்டர் வானியல் தூரம் இந்த ரோப் கார் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர்.


இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை, சுற்றுலா துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். கொடைக்கானல்-பழனி ரோப் கார் திட்டம் குறித்து முத‌ற்க‌ட்ட‌ ஆய்வுப்ப‌ணிக‌ள் ந‌டைபெறுவது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்