< Back
மாநில செய்திகள்
திருவட்டார் அருகே அரசு பஸ்சில் ஏற முயன்ற ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் பெண்களை ஏற்றிச்செல்ல மறுப்பதாக பரபரப்பு வீடியோ வைரல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திருவட்டார் அருகே அரசு பஸ்சில் ஏற முயன்ற ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் பெண்களை ஏற்றிச்செல்ல மறுப்பதாக பரபரப்பு வீடியோ வைரல்

தினத்தந்தி
|
13 Dec 2022 8:55 PM GMT

திருவட்டார் அருகே அரசு பஸ்சில் ஏற முயன்ற பள்ளி ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் இலவசம் என்பதால் அரசு பஸ்கள் பெண்களை ஏற்றி செல்ல மறுப்பதாக பேசும் வீடிேயா சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருவட்டார்:

திருவட்டார் அருகே அரசு பஸ்சில் ஏற முயன்ற பள்ளி ஆசிரியை தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் இலவசம் என்பதால் அரசு பஸ்கள் பெண்களை ஏற்றி செல்ல மறுப்பதாக பேசும் வீடிேயா சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனியார் பள்ளி ஆசிரியை

திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதியை சேர்ந்தவர் மேரி கிளாடிஸ். இவர் ஆற்றூரில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் இவர் பள்ளிக்கு செல்வதற்காக புலியிறங்கி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.

அப்போது குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் 'பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பஸ் புலியிறங்கி பஸ் நிறுத்தத்தில் வந்தபோது அங்கு காத்திருந்த ஆசிரியை உள்ளிட்ட பயணிகள் பஸ்சை நிறுத்த முயன்றனர். ஆனால், பஸ் நிற்காமல் சிறிது தூரம் தள்ளி சென்று நின்றது. உடனே, அங்கு நின்ற அனைவரும் ஓடி சென்று பஸ்சில் ஏற முயன்றனர்.

தலையில் பலத்த காயம்

ஆசிரியை மேரி கிளாடிஸ் படிக்கட்டில் கால் வைத்து ஏற முயன்றபோது ஓட்டுனர் திடீரென பஸ்சை எடுத்துள்ளார். இதனால் ஆசிரியை நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனை கண்ட அந்த பகுதியில் நின்ற மக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் காயமடைந்த ஆசிரியை ஆவேசமடைந்து '3 பஸ்கள் நிற்காமல் சென்றது. இந்த பஸ்சை தள்ளி நிறுத்தினார். இலவச பஸ்கள் நாங்கள் கேட்கவில்லை, பள்ளிக்கு சரியான நேரத்தில் சென்றடைய பஸ்சுக்காக காத்து நின்றாலும், பெண்களுக்கு அரசு பஸ்சில் பயணிக்க இலவசம் என்பதால் பெரும்பாலான பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல்தான் செல்கின்றன. பஸ் நிறுத்தம் தாண்டி நிறுத்திய பஸ்சில் ஏற முயன்ற போது எனக்கு உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.' என அங்கு நின்று அழுதபடி கூறினார்.

வீடியோ வைரல்

பின்பு அவர் ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதற்கிடையே அந்த ஆசிரியை வருத்தத்துடன் பேசும் வீடிேயா தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்