சென்னை
தாம்பரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை பலி
|தாம்பரம் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி ஆசிரியை பலியானார்.
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (21) உடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். வழியில் மதனபுரம் அருகே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயன்ற போது வேகத்தை கட்டுப்படுத்த தீபிகா பிரேக் பிடித்தார். இதில் நிலை தடுமாறிய ரேவதி சாலையில் விழுந்தார்.
அப்போது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வேனின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. படுகாயம் ரேவதியை அந்த வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேவதியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது மகள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.