அரியலூர்
குடிபோதையில் சாலையில் படுத்து, பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட டீக்கடை ஊழியர்
|குடிபோதையில் சாலையில் படுத்து, பஸ்சை மறித்து டீக்கடை ஊழியர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 38). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் அவர் குடிபோதையில், மது பாட்டில்கள் 5 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக புலம்பியவாறு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் சாலையில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், முருகானந்தத்தை சமாதானப்படுத்தி அழைத்துச்சென்று சாலையோரத்தில் அமர வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் சாலைக்கு ஓடிவந்து பஸ்சை மறிப்பது, வாகனங்களை மறிப்பது என்று ரகளையில் ஈடுபட்டார். மேலும் அங்குள்ள பூக்கடையில் இருந்து பூச்சரத்தை எடுத்து வந்து, சாலையில் பிய்த்து வீசி மீண்டும் சாலையில் படுத்தார். அவரை சமாளிக்க முடியாமலும், போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியாமலும் தவித்த போலீசார், மீண்டும் மீண்டும் அவரை சமாதானப்படுத்தி சாலையோரத்தில் அமர வைத்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து முருகானந்தத்தை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அவரது மனைவி கேட்டுக்கொண்டதன்பேரில், முருகானந்தத்தை எச்சரித்து விடுவித்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது போன்று குடிபோதையில் ரகளையில் ஈடுபடுபவர்களை தடுக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும். குற்றம் செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க ேவண்டும், என்றனர்.