திருச்சி
பஸ் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த டீக்கடை
|பஸ் நிலையத்தில் டீக்கடை தீப்பற்றி எரிந்தது.
தீப்பற்றி எரிந்தது
துறையூர் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருபவர் சசிகுமார். இவர் நேற்று விற்பனைக்காக கடையின் முன்பாக கியாஸ் அடுப்பில் வடை போன்ற பலகாரங்களை தயார் செய்து கொண்டிருந்தார். வடை சட்டியில் அளவுக்கு அதிகமான எண்ணெய் இருந்த நிலையில், அடுப்பில் இருந்து எண்ணெயில் தீப்பற்றியது. தீ மளமளவென கடை முழுவதும் பரவியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இது பற்றி தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பொருட்கள் நாசம்
இந்த தீ விபத்தில் டீக்கடையில் இருந்த குளிர்சாதன பெட்டி, மாவு அரைக்கும் எந்திரம், மின் விசிறி, தின்பண்ட பொருட்கள் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் துறையூர் பஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.