< Back
மாநில செய்திகள்
செல்போன் மூலம் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து
கடலூர்
மாநில செய்திகள்

செல்போன் மூலம் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

தினத்தந்தி
|
17 Dec 2022 12:15 AM IST

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அதிகாரிகள் செல்போனில் ஒலிபரப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலூர்

அரசாணை

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும். இதில் முக்கியமாக, இந்த வாழ்த்து பாடலை இசை தட்டுக்கள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடவேண்டும். இந்த பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, செல்போனில் பதிந்து வைக்கப்பட்ட பாடல் மூலமாகவும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

செல்போனில் ஒலித்த பாடல்

அந்த வகையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நேற்று காலை பூஜ்ய குறைபாடு, பூஜ்ய விளைவு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் அவர் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டதால், தொழில் மைய அதிகாரிகளே கருத்தரங்கை தொடங்கினர்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அங்கிருந்த அதிகாரி ஒருவர், தனது செல்போன் மூலமாக மைக்கில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை வாய்ப்பாட்டாக பாடவேண்டும் என்று அரசு உத்தரவு உள்ள நிலையில், செல்போன் மூலம் ஒலித்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கருத்தரங்கு தொடர்ந்து நடைபெற்றது.

இதற்கிடையே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் செல்போன் மூலமாக ஒலிபரப்பப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்