திருவள்ளூர்
சாலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்; தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்றது அம்பலம்
|சாலையில் பிணமாக கிடந்த தொழிலாளி வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செல்போனை பறிக்க முயன்ற வாலிபரை தடுத்ததால் அடித்து கொன்றார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது 43). இவர் கிரேன் ஆபரேட்டராக தூத்துக்குடியில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சோ்ந்த ஊருக்கு திரும்பிய பாபு 14-ந்தேதி பொன்னேரி பஞ்செட்டி நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் மேட்டு காலனி அருகே சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் கிருஷ்ணாபுரம் மேட்டு காலனியை சேர்ந்த இருதயராஜ் (26) என்பவர் அந்த வழியாக சென்றது பதிவாகி இருந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சம்பவத்தன்று பாபுவை வழிமறித்த இருதயராஜ் அவரிடம் செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார்.
பாபு செல்போனை எடுக்க விடாமல் தடுத்ததால் அருகே கிடந்த கல்லை எடுத்து பாபுவை தாக்கினார். இதில் பாபு மயங்கி விழுந்து இறந்தார். இருதயராஜ் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்து சென்றதை ஒப்புகொண்டார். பின்னர் இருதயராஜ் வீட்டில் இருந்த பாபுவின் செல்போனை மீட்ட போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி இருதையராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.