திருநெல்வேலி
பொதுமக்கள் திடீர் சாலைமறியல்; 40 பேர் கைது
|பாளையங்கோட்டையில், பட்டா வழங்கக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையில், பட்டா வழங்கக்கோரி திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலைமறியல்
பாளையங்கோட்டை சமாதானபுரம் மனகாவலம்பிள்ளை நகரில் கடந்த 60 ஆண்டுகளாக பொதுமக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அங்கு வசிப்பவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி, நேற்று காலையில் மனகாவலம்பிள்ளை நகரில் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
40 பேர் கைது
உடனே பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சரவணன், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். சாலையில் அமர்ந்து போராடிய சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே கைதானவர்கள், மண்டபத்தில் சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.