சென்னை
சொகுசு பஸ்சில் திடீர் தீ விபத்து
|ஸ்ரீபெரும்புதூர் அருகே சொகுசு பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை போரூரில் இருந்து வேலூர் நோக்கி தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் தாம்பரம் கூட்டுச்சாலை அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்புற டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார்.
சிறிதுநேரத்தில் பஸ்சின் முன்புறம் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. வெப்பத்தின் தாக்கத்தில் பஸ் கண்ணாடிகள் வெடிக்க தொடங்கியது. அந்த வழித்தடத்தில் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தி எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதல் பஸ்சின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்து விட்டது. பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதனால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.