பஸ்சுக்கு காத்திருந்த மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்
|பஸ்சுக்காக காத்திருந்த மாணவியை அவரது காதலன் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குப்பத்தாமோட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமார், தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு மாணவியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் மகளை கண்டித்தனர். இதனால் அந்த மாணவி கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பஸ் ஏறுவதற்காக மாணவி திருவலம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். பஸ்சுக்காக அவர் அங்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியிடம் ஏன் என்னிடம் பேசமறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடனடியாக சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.