< Back
மாநில செய்திகள்
வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் நடுரோட்டில் விழுந்து காயம்
சென்னை
மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் நடுரோட்டில் விழுந்து காயம்

தினத்தந்தி
|
27 Oct 2023 9:10 AM IST

வண்ணாரப்பேட்டையில் மாநகர பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர், நடுரோட்டில் விழுந்ததில் காயம் அடைந்தார். பின்னால் எந்த வாகனங்களும் வராததால் உயிர் தப்பினார்.

திருவொற்றியூரில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி மாநகர பஸ்(தடம் எண்28) வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே பஸ்சில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்்தது. வண்ணாரப்பேட்டை வந்தபோது ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும் பஸ்சில் ஏறினர்.

இதனால் பஸ்சின் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும் மாணவர்கள் தொங்கியபடி சென்றனர். பின்பக்க படிக்கட்டில் அரசு பள்ளி மாணவர் ஒருவரும் தொங்கியபடி பயணம் செய்தார்.

பஸ்சின் வேகத்தில் நிலை தடுமாறிய அந்த மாணவர், கால்கள் சாலையில் உரசியபடி பஸ்சின் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்தார். சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தொங்கியபடி சென்ற அந்த மாணவர், ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக கை நழுவி ஓடும் பஸ்சில் இருந்து தவறி நடுரோட்டில் விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்தவர்கள், அந்த மாணவரை மீட்டனர். கீழே விழுந்த வேகத்தில் மாணவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பஸ்சில் இருந்து மாணவர் சாலையில் விழுந்தபோது நல்லவேளையாக பின்னால் மற்ற வாகனங்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சியை பஸ்சின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழித்தடத்தில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்