தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிரை மாய்த்த மாணவி
|தந்தையின் குடிப்பழக்கத்தால் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
வேலூர் மாவட்டம் சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு பிரகாஷ் (வயது 17), என்ற மகனும், விஷ்ணுபிரியா (16) என்ற மகளும் உண்டு. பிரகாஷ் பிளஸ்-2 முடித்துள்ளார். விஷ்ணுபிரியா தற்போது நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது குடும்பம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. இரவு என்றாலே வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்துள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை பிரபு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். பிரகாஷ் வெளியே சென்று இருந்தார். கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார். மதியம் வீட்டிற்கு கற்பகம் வந்து பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்டு கொண்ட நிலையில் விஷ்ணுபிரியா இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஷ்ணுபிரியாவை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடிதம் சிக்கியது
இதனைத்தொடர்ந்து வீட்டில் பார்த்தபோது விஷ்ணுபிரியா எழுதிய உருக்கமான கடிதம் இருந்தது. அதில் என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என எழுதி இருந்தார்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.