பெரம்பலூர்
அரசு பள்ளியில் மாணவரை பாம்பு கடித்தது
|அரசு பள்ளியில் மாணவரை பாம்பு கடித்தது.
10-ம் வகுப்பு மாணவர்
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் ஆதித்யா (வயது 16). இவரது தாய் இறந்துவிட்ட நிலையில், தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். மேலும் இவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ஆதித்யா பள்ளிக்கு சென்றார். இதையடுத்து அவர் சிறுநீர் கழிப்பதற்காக காலை 9.15 மணியளவில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. பாம்பை கண்டு அச்சமடைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
பாம்பு கடித்தது
அப்போது பாம்பு, ஆதித்யாவின் இடது கையில் கடித்தது. இதனால் வலியால் ஆதித்யா அலறினார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர், தானாகவே சிகிச்சைக்காக அருகே உள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சேர்ந்தார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஆதித்யாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
தற்போது ஆதித்யா நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஆதித்யாவை பாம்பு கடித்தது பற்றி அறிந்த பள்ளி ஆசிரியர்களும், மாணவ-மாணவிகளும் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்து, உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசாரும், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர் ஆதித்யா மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவரை பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவர் பாலாஜி செய்முறை தேர்வு முடிந்து, மதிய உணவு இடைவேளையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றபோது லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விஷ ஜந்துக்களின் கூடாரம்
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறையை சுற்றியும், வளாகப்பகுதியிலும் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதோடு, விஷ ஜந்துக்களின் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளின் வளாகங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.