நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பிடித்து சாதனை..!
|நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை,
2023-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில் 78 ஆயிரத்து 693 பேர் இந்த ஆண்டு தகுதி பெற்றுள்ளனர். மேலும் தமிழக ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் முதல் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்ததுடன், நீட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அவரது பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர் முதல் முயற்சியிலேயே சாதித்து இருக்கிறார். இதில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.