செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி
|செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பர்களுடன் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பூந்தமல்லி,
குன்றத்தூர் நால்ரோடு ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் ஜெகதீசன் (வயது 17). அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் தனது நண்பர்களான சூர்யா மற்றும் யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்துள்ளார்.
அப்போது, அவரது நண்பர் சூர்யா, ஜெகதீசனை நீச்சல் அடிக்கும்படி ஏரியில் இறக்கியுள்ளார். அப்போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் ஏரியில் மூழ்கினார். அவரை மீட்க சூர்யா போராடியும் அவரால் மீட்க முடியவில்லை. உடனடியாக இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெகதீசனை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.