< Back
மாநில செய்திகள்
ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Oct 2022 4:55 PM IST

ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரங்கிமலை சம்பவம்

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்தியப்பிரியா ரெயில் முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மாணவி சத்யா, அவரது தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்தியப்பிரியா, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அவருடனான காதலை சத்தியப்பிரியா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி சத்தியப்பிரியாவை சதீஷ் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடுமையான சட்டம் வேண்டும்

அதன் உச்சகட்டமாக நேற்று பிற்பகலில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தகராறு செய்த சதீஷ், காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியாவை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார்.

இதை தாங்க முடியாத சத்தியப்பிரியாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தியப்பிரியாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் நிலையில், சத்தியப்பிரியாவின் கொலை மற்றும் தந்தையின் தற்கொலையால் அந்த குடும்பமே உருக்குலைந்து போயிருக்கிறது.

தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று கூறப்பட்டாலும் கூட, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக சென்று வர முடியாத நிலைமை தான் இப்போதும் தொடர்கிறது.

பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிர் தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க கடுமையான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்