< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட இலங்கை தமிழர்
ஈரோடு
மாநில செய்திகள்

குடிபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட இலங்கை தமிழர்

தினத்தந்தி
|
25 Jun 2023 2:39 AM IST

பவானிசாகரில் குடிபோதையில் போலீசாரிடம் இலங்கை தமிழர் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் பாட்டிலை உடைத்து தனக்கு தானே கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானிசாகர்

பவானிசாகரில் குடிபோதையில் போலீசாரிடம் இலங்கை தமிழர் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் பாட்டிலை உடைத்து தனக்கு தானே கீறிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிபோதையில்...

பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் தீபன் (வயது 35). இவருடைய மகன் பவானிசாகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்துக்கு குடிபோதையில் சென்ற தீபன், அங்கிருந்த ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகராறு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குடிபோதையில் இருந்த தீபனை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வீட்டுக்கு தீபன் செல்லாமல் தொடர்ந்து போலீசாரிடமும் தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டார். உடனே தீபன் வந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்துக்கு தீபனை அழைத்து சென்றனர்.

சிகிச்சை

போலீஸ் நிலையம் சென்றடைந்ததும், அங்கிருந்த பாட்டிலை எடுத்து உடைத்து தன்னுடைய கழுத்து மற்றும் உடலை லேசாக கிழித்துக்கொண்டதுடன், போலீசார் தன்னை தாக்கி விட்டதாக கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புறநோயாளியாக சிகிச்சை பெற்று தீபன், தன்னுடைய வீட்டுக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்