< Back
மாநில செய்திகள்
பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
23 Oct 2022 6:30 PM GMT

திருமயம் அருகே பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாகநாத சுவாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பேரையூர் விளக்கு சாலையில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலை செல்கிறது.

இந்த சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இதனால் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடந்து கோவில் செல்லவும், ஊருக்கு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

அடிக்கடி விபத்து

புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பேரையூர் விளக்கு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், சிலர் இறந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

வேகத்தடை அமைக்க கோரிக்கை

பேரையூரை சேர்ந்த திருமாபாண்டி:- புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்கள் கையெழுத்து பெற்ற மனுவை மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ளோம். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து உள்ளோம்.

பக்தர்களுக்கு மன கஷ்டம்

கருப்பையா:- பேரையூர் பகுதி மிகப்பெரிய ஆன்மிக தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள நாகநாத சுவாமியை தரிசனம் செய்வதற்காகவும், திருமண வரம், குழந்தைபேறு ேவண்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் வேன், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ்களில் வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு பஸ்சில் வந்து இறங்கி சாலையை கடக்கும் போது அந்த வழியாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு பக்தர்கள் காயம் அடைவதால் அவர்களுக்கு மன கஷ்டம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

விபத்து குறைய வாய்ப்பு

ஆட்டோ டிரைவர் ஆண்டியப்பன்:- இந்த பகுதியில் அதிவேகமாக வரும் கார் மற்றும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள சாலை 3 பகுதிகளாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வேகத்தடை அமைக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் விபத்து குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்