சிறுமி குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு நடைபெற்ற திருவாரூர் தெப்ப திருவிழா
|திருவாருரில் தெப்ப திருவிழா நடைபெறும் நேரத்தில் குளத்தில் முழ்கிய ஆட்டோ டிரைவரை தேடிய போது 12 வயது சிறுமி உடல் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி 3 நாட்களாக நடந்து வருகிறது. கடைசி நாள் தெப்ப திருவிழா நிறைவுபெறும் நிலையில் திருவாரூர் ரெயில்வே காலனியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 48) என்பவர் சாமி கும்பிட தியாகராஜர் கோவிலுக்கு வந்துள்ளார்.
ஆட்டோ டிரைவரான வெங்கடேசன், கமலாலய குளத்தில் நீண்ட நேரமாக நீச்சல் அடித்தபடி குளித்துள்ளார். அப்போது குளத்தின் நடுவே உள்ள நாகநாதசாமி கோவிலுக்கு நீச்சல் அடித்து சென்றுள்ளார். கோவிலின் படியை அடைவவதற்கு சற்று தூரத்திற்கு முன்பு வெங்கடேசன் திடீரென நீரில் மூழ்க தொடங்கியுள்ளார். அப்போது அவர் கையை மேலே தூக்கி கரையிலுள்ளவர்களின் உதவியை நாடியுள்ளார். கரையில் இருப்பவர்கள் உடனடியாக திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் குளத்தில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் படகு மூலம் ஒரு குழு தொடர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 12 வயது மதிக்கதக்க ஒரு சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. இந்த உடலை கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து திருவாரூர் நகர போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலர் தனது குடும்பத்துடன் பலூன் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்ய திருவாரூர் வந்துள்ளனர். இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமி முஸ்கான் என்பவர் குளத்தில் குளிக்கும் போது தவறி நீரில் முழ்கி இறந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திருவாரூர் நகர காவல் துறையினர் இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தெப்பத் திருவிழாவில் இரண்டாவது நாளான நேற்று நள்ளிரவு தெப்பம் அலங்கார தூணில் மோதி 2 தூண்கள் விழுந்து விபத்து ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக தெப்பம் செல்லும் இந்த குளத்தில் ஒரு சிறுமி முழ்கி இறந்துள்ளார்.
மேலும் நீரில் முழ்கியவரை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது நாள் தெப்பம் உற்சவம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு திட்டமிட்டப்படி நடந்து முடிந்துள்ளது.