ஆசிட் வீச்சு தாக்குதல்களுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் - அமித்ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்
|ஆசிட் வீச்சு தாக்குதல்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2013ம் ஆண்டு, மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயும், மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு டெல்லியில் ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆசிட் தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. காதலை நிராகரித்த, திருமணத்தை மறுத்த, வரதட்சணை வாங்க முடியாத பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆசிட் வீச்சு வன்முறை பல நாடுகளில் நிகழும் அதே வேளையில், பாகிஸ்தான், வங்காள தேசம், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியாவில் இது அடிக்கடி நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சட்ட ஆணையம், 2008ல் சமர்ப்பித்த 226வது அறிக்கையில், ஆசிட் வீச்சு வன்முறையை விரிவாகக் குறிப்பிட்டு, அதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் அமில விற்பனையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த சட்டம் உள்ளடக்கியது. ஆனால், மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை. டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி, தனது அறிக்கையில் சட்ட ஆணையத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பிரச்னைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாலியல் வன்முறையைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றியது மற்றும் ஆசிட் தாக்குதலைச் சமாளிக்க ஐபிசியில் பிரிவுகள் 326A மற்றும் 3268 ஐச் செருகியது, ஆனால் அமிலத் தாக்குதலைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றத் தவறிவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் 3264 மற்றும் 3268 ஆகியவை இந்தக் குற்றத்தை நிவர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதால், ஆசிட் வீச்சுகள் உயிருக்கு ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட்டு 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 2013ஆம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி ஆசிட் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆசிட் விற்பனையை விஷப் பொருள்கள் சட்டம், 1919ன் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், இதற்கு மாநில அரசுகள் சொந்த விதிகளை உருவாக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின் படியும், தி வர்மா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆசிட் வீச்சுகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.