திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவலை தடுக்க தனிப்படை அமைத்து சோதனை
|திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவலை தடுக்க தனிப்படை அமைத்து சோதனை நடத்தப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூரில் கடந்த 24-ந் தேதி உரிய ஆவணங்கள் இன்றி மத்திய பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அங்கிருந்து வெளியேறி வேறு வேலைக்கு சென்றபோது சிக்கியது தெரியவந்தது. இதுபோல் வெங்கமேடு பகுதியில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் சொந்த ஊரில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இங்கு வந்து போலியாக ஆதார் கார்டு பெற்று கடந்த 7 மாதமாக பதுங்கி இருந்தது தெரியவந்தது. இவர்களுக்கு ஆதார் கார்டு எடுத்து கொடுத்ததாக ,திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு எழுதி கொடுத்து இடைத்தரகராக இருந்த மாரிமுத்து (வயது 42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர் இதுபோல் பலருக்கு போலியாக ஆதார் கார்டு பெற்றுக்கொடுத்தது தெரியவந்தது.
இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தினர் திருப்பூரில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா தெரிவித்துள்ளார். மேலும் வங்கதேசத்தினர் ஊடுருவலை தடுக்க தனிப்படை அமைத்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.