< Back
மாநில செய்திகள்
சிறப்பு குழு அமைக்க வேண்டும்
நீலகிரி
மாநில செய்திகள்

சிறப்பு குழு அமைக்க வேண்டும்

தினத்தந்தி
|
8 Aug 2023 10:30 PM GMT

விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ஊட்டி

விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முகமது பாரூக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு உள்ளாட்சி கடை வியாபாரிகளின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூ, வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகமெங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள், சங்க பிரதிநிதிகளாக மாவட்டந்தோறும் ஒருவரை தேர்வு செய்து மாநில கமிட்டியை ஏற்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்கு

ஜி.எஸ்.டி. பதிவு செய்து வணிகம் செய்து வரும் வணிகர்கள் மீது எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யவும், கைது செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இதை உடனே கைவிட வேண்டும். தற்போது ஜி.எஸ்.டி. கணக்கை மாதந்தோறும் 20-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு நாள் தாமதித்தாலும் அதற்கு கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு கைவிடுவதோடு, பதிவேற்றம் செய்யும் நாட்களை ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும்.

இதுதொடர்பாக தென்மண்டல நிர்வாகிகள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து முறையிட உள்ளனர். தமிழக அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்திக் கொள்ள விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது. அதே விதிவிலக்கு சிறு, குறு வியாபாரிகளுக்கும் அளிக்க வேண்டும்.

சிறப்பு குழு

இந்த பிரச்சினையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது, கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து காக்க பேரமைப்பு பாடுபடும். ஆண்டுதோறும் எப்.எஸ்.எஸ்.ஐ. உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனே கைவிட்டு, குறைந்தது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்கும் முறையை கொண்டு வர வேண்டும்.

விலைவாசி உயர்வு 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அரசுகளின் முறையான திட்டமிடுதல் இல்லாததே காரணம் ஆகும். இதற்கு தீர்வு காண விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்க வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த முறையால் வங்கிகள் தான் வருவாய் ஈட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம்

முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.

கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் குலசேகரன், பொருளாளர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்