தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
|தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1.1.2023 அன்றைய தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நவம்பர் 9-ந் தேதி தொடங்க உள்ளன. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை வாக்காளர் மேற்கொள்ள முடியும். அதற்காக 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 ஆகிய விண்ணப்பங்களை பெற்று உரிய திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
4 சிறப்பு முகாம்
பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக வாக்காளர்களுக்கு வசதியாக நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் ஆணையிட்டுள்ளது.
எனவே உங்கள் மாவட்டங்களில் இதுகுறித்து மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் போதிய அளவில் மாவட்டங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த நாட்களில் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள் அனைவரும் பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.