அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நாளை உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்
|உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது.
முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் சிறு, குறு விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், நலிவடைந்த விவசாய கூலித்தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய தொகை, விபத்து நிவாரண தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, இறுதிச்சடங்கு நிவாரணத்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. இதனை அனைத்து பயனாளிகளும் பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் குறுவட்டம் வாரியாக நடைபெற உள்ளது. அதன்படி, செந்துறை குறுவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை), ஜெயங்கொண்டம் குறுவட்டத்தில் 18-ந்தேதியும், அரியலூர் குறுவட்டத்தில் 19-ந்தேதியும் தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. ஆண்டிமடம் குறுவட்டத்தில் 20-ந்தேதியும், தா.பழூர் குறுவட்டத்தில் 25-ந்தேதியும், திருமானூர் குறுவட்டத்தில் 26-ந்தேதியும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது. மாத்தூர் குறுவட்டத்தில் 27-ந்தேதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கீழப்பழுவூர் குறுவட்டத்தில் 31-ந்தேதி அழகப்பா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏலாக்குறிச்சி குறுவட்டத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியும், பொன்பரப்பி குறுவட்டத்தில் 2-ந்தேதியும், உடையார்பாளையம் குறுவட்டத்தில் 3-ந்தேதியும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது. நாகமங்கலம் குறுவட்டத்தில் 7-ந்தேதியும், குவாகம் குறுவட்டத்தில் 8-ந்தேதியும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது. குண்டவெளி குறுவட்டத்தில் 9-ந்தேதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், சுத்தமல்லி குறுவட்டத்தில் 10-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. எனவே தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.