< Back
மாநில செய்திகள்
பட்டாசு ெவடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து
சேலம்
மாநில செய்திகள்

பட்டாசு ெவடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து

தினத்தந்தி
|
26 Oct 2022 1:57 AM IST

சேலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

சேலத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்து 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

நூல் குடோன்

சேலம் குகை ராமலிங்கம் மடாலயம் தெருவை சேர்ந்தவர் அதுல்பட். இவர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியில் நூல் குடோன் வைத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது இதில் இருந்து தீப்பொறி பறந்து வந்து ஜன்னல் வழியாக நூல் குடோனுக்குள் விழுந்தது.

இதையடுத்து அந்த குடோனில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் அங்கு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் துணி மற்றும் நூல் பண்டல்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிசை எரிந்தது

சேலம் மாரமங்கலத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 68). இவரது குடிசையிலும் பட்டாசு தீப்பொறி பறந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சூரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் அறைக்குள் பட்டாசு விழுந்து தீப்பிடித்தது. அதனையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதில் 6 முட்டைகளில் இருந்த அரிசி எரிந்து சேதமானது.

கார் பட்டறை

சேலம் வீரபாண்டி நகரை சேர்ந்த சவுந்திரராஜன் (35) என்பவர் 3 ரோடு பகுதியில் கார் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பட்டாசு வெடித்த போது அதில் இருந்து பறந்த தீப்பொறி சவுந்திரராஜன் கார் பட்டறைக்குள் விழுந்து தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அங்கு எரிந்த தீயை அணைத்தனர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூரை வீடு

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கச்சுப்பள்ளி ஊராட்சி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (42), இவர் அந்த பகுதியில் கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவரது வீட்டின் அருகே சிறுவர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் சிதறிய தீப்பொறி பழனிசாமி வீட்டின் கீற்றினால் ஆன கூரையில் விழுந்து, தீப்பிடித்தது. இதனால் அவரது கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்