< Back
மாநில செய்திகள்
குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தும் மகன்; பெண் புகார்
வேலூர்
மாநில செய்திகள்

குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தும் மகன்; பெண் புகார்

தினத்தந்தி
|
18 Oct 2023 6:49 PM IST

குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தும் மகன் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார்.

குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தும் மகன் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் அதை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குடிக்க பணம் கேட்டு மிரட்டல்

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அளித்துள்ள மனுவில், எனக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் இறந்துவிட்டார். என் மூத்த மகன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினமும் என்னையும், அவரது மனைவியையும் குடிக்க பணம் தருமாறு அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுக்கிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வரதட்சணை கொடுமை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், காட்பாடியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் அளித்தோம். என் கணவர் மத்திய அரசில் பணிபுரிவதால் வீட்டிற்கு வார இறுதி நாட்களில் மட்டுமே வீட்டில் தங்குவார். மற்ற நாட்களில் பணி காரணமாக பெங்களூரு சென்று விடுவார்.

இந்தநிலையில் கொரோனா காலத்தின் போது எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதில் இருந்து எனது மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி என் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். பின்னர் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் புகார் அளித்ததை அடுத்து என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக பெண்கள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுதி கொடுத்துவிட்டு, பின்னர் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என தெரிவித்துவிட்டார். இதனால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய என் கணவர், மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்