இறந்த தந்தையின் மெழுகுசிலையுடன் திருமண வரவேற்பு விழா நடத்திய மகன்
|சேலம் அருகே இறந்த தந்தையின் மெழுகுசிலையுடன் திருமண வரவேற்பு விழா நடத்திய மகனின் செயல் உறவினர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
சேலம்,
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த ஆண்டு என்ஜினீயரான தனது மகன் ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கு திருமணம் செய்து வைக்க தீவிர ஏற்பாடு செய்து வந்தார். ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இறந்து ஓராண்டுக்கு பிறகு அவருடைய மகன் ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும், ஜூலியட் லதா என்ற பெண்ணுக்கும் இன்று சேலம் செவ்வை நகர் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்துவ பேராலயத்தில் திருமணம் நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று இரவு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஆரோக்கிய இயேசு ராஜா தனது இறந்த தந்தையின் கனவை நினவாக்கும் வகையில் அவருடைய உருவத்தை ரூ.5 லட்சத்தில் மெழுகுசிலையாக வடிவமைத்து காட்சிப்படுத்தினார்.
விழாவில் அவரது கையில் கைச்செயின் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து மணமக்கள் இருவரும் அவருடைய கால்களில் விழுந்து வணங்கினர். இந்த செயல் அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை மெய்சிலிர்க்க வைத்தது.