ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்
|உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரின் விசாரணைக்காக ராணுவ வீரர் ராமன் ஆஜரானார்.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 26). இவர் இந்திய ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகி வந்தாராம். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பமானார்.
இதற்கிடையில் ராமன் அந்த பெண்ணிடம் கருவில் இருந்த குழந்தையை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று மிரட்டி கருவில் இருந்த குழந்தையை கலைக்க செய்துவிட்டு பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக ராமனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதன் அடிப்படையில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ராணுவ வீரர் ராமன் ஆஜரானார்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக ராமனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலையம் முன்பு ராணுவ வீரரின் உறவினர்கள் மற்றும் இளம்பெண்ணின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். போலீஸ் நிலையம் முன்பு இரு தரப்பினர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.