< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 10 வருடங்களாக பாதுகாப்பு பணியில் இருந்த ராணி மோப்ப நாய் ஓய்வு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 10 வருடங்களாக பாதுகாப்பு பணியில் இருந்த 'ராணி மோப்ப நாய்' ஓய்வு

தினத்தந்தி
|
5 Aug 2022 10:31 AM IST

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து ஒய்வு பெற்ற மோப்ப நாய் ராணிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ளது. இதில் நாளொன்றுக்கு சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலையம் முழுவதும் மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் டிக்கெட் மற்றும் உடமைகள் சோதனை உட்பட அனைத்து வகையான சோதனைகளையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தான் செய்கின்றனர். மேலும் சென்னை விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை வெடி பொருட்கள், ரசாயனங்கள், போதைப் பொருள்கள் போன்றவற்றை கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணி என்கிற மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக நேற்று ஓய்வு பெற்றது. ராணியின் பணியை கௌரவிக்கும் விதமாக அதற்கு ஓய்வு பெறும் நிகழ்ச்சியை மத்திய தொழிற்படை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி பழவந்தாங்கலில் உள்ள சி.எஸ்.ஐ.எப் அலுவலகத்தில் டி.ஐ.ஜி ஸ்ரீராம் தலைமையில் நடந்தது. இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராணி மோப்ப நாய்க்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டு மாலையணிவித்து மெடல் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் ராணி மோப்ப நாயை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஜிப்பில் ஏற்றி கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

மோப்பநாய் ராணியை பராமரித்து வந்த முத்துக்குமார் கூறுகையில்*

சென்னை விமானநிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்னுடன் பாதுக்காப்பு பணியில் பணியாற்றிய ராணி ஓய்வு பெற்றது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணி இதுவரையும் தன்னுடைய பணியிலிருந்து முரண்பட்டது இல்லை. மேலும் சொல்லும் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படியும்.

இதுவரையும் ராணிக்கு எந்த ஒரு உடல் உபாதைகள் ஏற்பட்டதில்லை. ராணி வெடி பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் கண்டறிவதில் துல்லியமாக செயல்படும். என்றார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் கூறுகையில்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் தற்போது ஒன்பது மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. 10 வருடங்கள் ஆறு மாதங்கள் பணி செய்து இன்று (நேற்று) ராணி என்கிற மோப்ப நாய் ஓய்வு பெற்றது. மேலும் இரண்டு மோப்ப நாய்கள் பயிற்சி பெற்று வருகின்றன. வரும் நவம்பர் மாதத்தில் பயிற்சி முடித்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் சேர உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையும் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது திறக்கப்பட உள்ளதால் கூடுதலான பாதுகாப்புகள் தேவைப்படுகிறது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் தற்போது 8 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. கூடுதலாக 8 மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது.

பாதுகாப்பு பணியில் மோப்ப நாய்களின் பங்கு மிக முக்கியமானது. பயணிகளின் உடமைகளில் ஏதாவது வெடி பொருட்கள் உள்ளதா என்பதை சோதனை செய்ய மோப்ப நாய்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் செய்திகள்