திண்டுக்கல்
வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பு
|வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்துக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40). இவர் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவர் சேனன்கோட்டை அருகே உள்ள மகாத்மாகாந்தி நகரில் புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டி வருகிறார். நேற்று கட்டிட வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வணிக வளாக பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு மாசி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கற்களுக்கு இடையே பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்தனர். அது சுமார் 4 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்கு கொண்டு சென்றனர்.