ஈரோடு
பர்கூரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
|பர்கூரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
அந்தியூரை அடுத்த பர்கூர் தட்டக்கரை பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தட்டக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அந்தியூர் திருநீலகண்டர் வீதியை சேர்ந்த இளங்கோ (வயது 41) என்பதும், அவர் கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை சரக்கு வேனில் கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளங்கோவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.