< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

தினத்தந்தி
|
10 May 2023 6:45 PM GMT

தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு செயல்பாடுகள் தொடக்கப்பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டுதல், புதிய கழிவறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பிரசன்னகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். விழாவில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் புதிய கழிவறை கட்டிடத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்கள் பயன்படுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். பின்தங்கிய மாவட்டமாக உள்ள நமது மாவட்டத்தில் மாணவர்கள் நன்றாக படித்தால்தான் அடுத்த தலைமுறை முன்னேற முடியும். எனவே அரசு வழங்கும் வசதிகளை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் மலர்விழி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜி, பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலர் சீதாராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றிய பொறியாளர் ஜெயபிரகாஷ், வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி நேரு மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மரியம் புஷ்பம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்