கடலூர்
இந்திய மாணவர்கள் தயாரித்த சிறிய ராக்கெட் வருகிற 19-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும்
|150 செயற்கை கோள்களுடன் இந்திய மாணவர்கள் தயாரித்த சிறிய ராக்கெட் வருகிற 19-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கடலூர் கஸ்டம்ஸ் சாலையில் இயங்கி வரும் கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதலாவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் அய்யப்பன் வரவேற்றார். பள்ளி தலைவர் ராஜாமணி, செயலாளர் நஜூமுதீன், இயக்குனர் கார்மேல் வின்சென்ட் ஆண்டறிக்கை வாசித்தனர். பொருளாளர் ராமலிங்கம், இயக்குனர்கள் அரவிந்த், உபைதுர்ரகுமான், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்தி மயில்சாமி அண்ணாதுரை குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சரியான திட்டமிடல்
இன்றைய காலக்கட்டத்தில், பெற்றோர்களின் கனவு தங்கள் குழந்தைகள் கல்வியில் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதாகும். நிலாவுக்கு சந்திராயன் போக வேண்டும் என்றால், சரியான திட்டமிடல் வேண்டும். நிலா 3 லட்சத்து 54 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளது. நிலா ஒவ்வொரு வினாடிக்கும் 1 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அந்த நிலாவை சரியான நேரத்தில், திசையில், வேகத்தில் சென்றால் தான் அடைய முடியும். செவ்வாய் அதை விட அதிக தூரத்தில் இருக்கிறது. அது கிட்டதட்ட ஒவ்வொரு வினாடிக்கும் 28 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது.
அதைபோய் சரியாக அடைய வேண்டுமென்றால், மிக, மிக கச்சிதமாக, சரியான நேரத்தில், வேகத்தில், திசையில் செல்ல வேண்டும். அது கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும், செல்ல முடியாது. 9 மாதங்கள் சென்றால் தான் அந்த பயணத்தை அடைய முடியும். அந்த 9 மாதங்களில் 10 நிமிடம் தள்ளி போனால், 18 ஆயிரம் கிலோ மீட்டருக்கு தள்ளி போய் விடும்.
கொரோனா
மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் நீர் ஆதாரம் குறைகிறது. நிலங்கள் குறைகிறது. விவசாயிகள் எண்ணிக்கை குறைகிறது. அதிக மக்கள் இருக்கும் போது, உணவு உற்பத்தி அதிக அளவில் தேவைப்படுகிறது. அதை ஈடுகட்ட தொழில்நுட்பம் தேவை. ஆனால், அந்த தொழில்நுட்பம் கொஞ்சம் மாறுபட்ட திசையில் சென்று விட்டதோ என்ற கேள்விக்குறி உள்ளது. இதை சரிபடுத்த வேண்டியது அவசியம், அவசரம் இருக்கிறது. இதை யார் செய்வார்கள். நீங்கள் தான், உங்களை போல மாணவர்கள் தான் செய்ய வேண்டும்.
கொரோனா வந்த பிறகு, பயம் வந்தது. பல துறைகளில் பல சந்தர்ப்பங்கள் உருவானது. கல்வி நிலையங்களில் எப்படி புதிதாக பாடம் கற்றுக்கொள்வது, திறமைகளை வளர்த்துக்கொள்வது என்று கற்றுக்கொண்டோம். இப்போது இருக்கும் நிலைமையில் உலகம் வேறுமாதிரியாக செல்லாமல் இருக்க வேண்டுமானால், அதற்கான சில குறைபாடுகளை தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சீனா பொருட்கள்
விவசாயம் முதல் விண்வெளி வரை நிறைய, நிறைய வாய்ப்புகள் வேறு மாதிரியாக உருவாகிறது. கொரோனாவுக்கு பிறகு சீனாவை உலக நாடுகள் புறந்தள்ளுகிற அவசியம் உருவாகி இருக்கிறது. சீனாவில் உள்ள பொருட்கள் தான் உலக அளவில் அதிகமாக இருந்தது. சீனாவை வைத்து தான் பல தொழிற்சாலைகள் ஆரம்பித்தார்கள். இப்போது சீனாவை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
தற்போது சீனா பொருட்கள் தேவை இல்லை என்று சொல்ல போகிறார்கள். சீனாவை தாண்டி அதிக மக்கள் தொகையும், இளைஞர்களும் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இதனால் சீனாவுக்கு சரியான பதிலாக இந்தியா தான் இருக்க முடியும். இன்றைய இளைஞர்கள் தான், அந்த இந்தியாவை உருவாக்க முடியும்.
செயற்கை கோள்
இனி அமெரிக்காவுக்கு போய் வேலை செய்ய வேண்டாம். அவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுங்கள் என்று நம்மிடம் வருவார்கள், அந்த காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கான திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதிக பொறியாளர்களை கொண்ட தமிழ்நாட்டில் சிறந்த பொறியாளர்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நிலாவுக்கு நம்மை விட அதிக நாடுகள் சென்றாலும், நிலவில் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் நாம் தான் நீர் இருப்பதை அறிந்து கூறினோம். அதை உலகமே பார்க்கிறது. நிலாவின் துருவ பகுதியில் முதன் முதலில் நமது கொடியை தான் பறக்க விட்டு இருக்கிறோம். முதலில் ராக்கெட்டில் 36 செயற்கை கோள்களை அனுப்பினார்கள். நாம் 104 செயற்கை கோள்களை அனுப்பினோம். சமீபத்தில் 143 செயற்கை கோள்களை அனுப்பினார்கள்.
விண்ணில் செலுத்தப்படும்
இன்னும் சில நாட்களில் ராக்கெட்டில் 150 செயற்கை கோள்களை அனுப்பும் வேலையில் நமது இந்திய மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அறிவியலில் உச்ச கட்டம் ராக்கெட் அறிவியல். இதை உங்களால் செய்ய முடியாது என்றார்கள். ஆனால் ராக்கெட் அறிவியலில் இந்தியர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நாம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். சந்திராயன், மங்கள்யான் அனுப்பி அதை நிரூபித்து இருக்கிறோம்.
எல்லாம் சரியாக அமைந்தால், இந்திய மாணவர்கள் 5 ஆயிரம் பேர் தயாரித்த சிறிய ராக்கெட்டில் 150 செயற்கை கோள்களுடன் வருகிற 19-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும். அப்போது உலகமே திரும்பி பார்க்கும். இந்திய மாணவர்களால் கூட ராக்கெட் செய்ய முடியும் என்று உலகமே வியக்கும். சமையல் கூடம் முதல் விண்வெளி வரை என ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞானம் கண்டிப்பாக இருக்கிறது. புதிது, புதிதாக கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
அதைத்தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மயில்சாமி அண்ணாதுரை கண்டு ரசித்தார். விழாவில் அறங்காவலர்கள் கோவிந்தசாமி, பாபுஜி ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் அறங்காவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆலோசகர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.