செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது; கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்
|திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலமானது. இது தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் மனித எலும்புக்கூடு் கிடந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் எலும்புக்கூடாக கிடந்தவர் திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (வயது 35) என்பது தெரிய வந்தது.
அவரது மனைவி சித்ரா (26) கள்ளக்காதலன் சக்திவேலுடன் சேர்ந்து சந்திரனை கொலை செய்து அந்த பகுதியில் புதைத்தது தெரியவந்தது.
கைது
சந்திரன், சித்ரா தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஒருவரிடம் விவசாய வேலை செய்துகொண்டு வயல்களை பார்த்துக் கொண்டு அங்கேயே சித்ரா தங்கியிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டை அடுத்த மையூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
சக்திவேல் அடிக்கடி சித்ராவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதை சந்திரன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேலும், சித்ராவும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து அருகில் உள்ள ஏரியில் புதைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் சித்ராவையும், சக்திவேலையும் கைது செய்தனர்.