திண்டுக்கல்
பட்டப்பகலில் உலா வந்த ஒற்றை யானை
|கொடைக்கானல் அருகே, பட்டப்பகலில் ஒற்றை யானை உலா வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. வீடுகளை சேதப்படுத்துவதோடு, விளைநிலங்களையும் காட்டு யானை நாசப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று காலை 9 மணியளவில் பேத்துப்பாறை கிராமத்துக்குள் ஒற்றை யானை உலா வந்தது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ-மாணவிகள், யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உயிருக்கு பயந்து, அருகே இருந்த வீடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். இதேபோல் மலைக்கிராம மக்களும் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். மலைக்கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைந்து, பொதுமக்களை அச்சுறுத்துகிற இந்த ஒற்றை காட்டு யானையை அங்கிருந்து நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.