"நீ இல்லாத உலகத்திலே... பாடல் பாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
|பாடகி சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது.
சென்னை,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இவ்விழாவில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அதனை தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
பாடகி சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது. அவரின் பாடலை நான் காரில் வெளியூர் செல்லும் சமயம் இரவு நேரத்தில் கேட்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு,
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை.
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.
அதனால்தான் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்து வணக்கம் செலுத்திவிட்டு நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பி.சுசீலா பேசுகையில்,
"முதல்-அமைச்சர் பாடியுள்ளது மிகப்பெரிய சாதனை நிகழ்வு. அவரது தந்தையை நினைத்து அவர் "நீ இல்லாத உலகத்திலே" என பாடியுள்ளார்" என்று தெரிவித்தார்.
முன்னதாக டாக்டர் பட்டம் வாங்க மேடைக்கு வந்த பி.சுசீலா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையை பிடிக்க முயன்றபோது தடுமாறி இருக்கையில் அமர்ந்தார். அருகில் இருந்த அமைச்சர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.