புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர்
|புதுக்கோட்டையில் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் அரசு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 35). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் மாரிமுத்துவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மாரிமுத்து தனது திருமணத்திற்கு வருமாறு அவரது முதலாளியும், தொழில் அதிபருமான கெல்வின்யாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
இதையடுத்து, மாரிமுத்துவுக்கு நித்யா (28) என்பவருடன் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்- மங்களநாயகி அம்பாள் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்துக்கு வந்த கெல்வின்யாவ் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்தார். பின்னர் அவருக்கு ஊரின் எல்லையில் இருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க மாரிமுத்துவின் உறவினர்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கு வந்திருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், நண்பர்களோடு பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டார். பின்னர் அருகே இருந்த திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் புத்தகம் மற்றும் தலா ரூ.500 வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவ-மாணவிகளின் திறமைகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாக தலைமையாசிரியர் ரெக்ஸ் ஜூனியான் ரெனியிடம் வழங்கினார். அதன்பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ-மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் அரசு பள்ளிக்கு நிதியுதவி கொடுத்ததை பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.