விளம்பரத்தில் நடிக்க நேர்முகத்தேர்வு.. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
|சென்னை ஓட்டலில் கேரள இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
கேரளாவை சேர்ந்த இளம்பெண் கீதா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் 'மாடலிங்' தொழில் செய்து வருகிறேன். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது சித்தார்த் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் அடிக்கடி என்னிடம் செல்போனில் பேசுவார். என்னை விளம்பர படத்தில் நடிக்க வைப்பதற்காக இங்கிலாந்து அனுப்புவதாக சித்தார்த் கூறினார்.
அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். அவர், சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வரும்படி கூறினார். நானும் ஆசையாக குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தேன். முதலில் அவர் விளம்பர படம் தொடர்பாக என்னிடம் பேசினார்.
திடீரென்று அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். அவரது ஆசைக்கு இணங்குமாறு என்னை வற்புறுத்தினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரை கீழே பிடித்து தள்ளிவிட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த புகார் மனு தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.