< Back
மாநில செய்திகள்
ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
மாநில செய்திகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
22 Oct 2023 9:00 AM IST

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் மிளிர, பழங்கள், பொரி மற்றும் கடலைகள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும். அந்த வகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

கோயம்பேடு மொத்த விற்பனை பூக்கடைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. திருவள்ளூர், மதுரை, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிப்பூவின் விலை கிலோ ரூ.1,000, முல்லைப்பூ கிலோ ரூ.1,200, செவ்வந்தி கிலோ ரூ.200 ரோஜா கிலோ ரூ.250 ஆக விற்பனை ஆகிறது.

ஆயுத பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மலிவான விலையில் கிடைக்க வழி செய்யும் வகையில், கோயம்பேடு அங்காடி விற்பனை நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்