திருவாரூர்
போக்குவரத்து காவலருக்கு நிழற்குடை அமைக்க வேண்டும்
|போக்குவரத்து காவலருக்கு நிழற்குடை அமைக்க வேண்டும்
லெட்சுமாங்குடி நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து காவலருக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு பிரிவு சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, கொரடாச்சேரி சாலை, வடபாதிமங்கலம் சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளன. இந்த நான்கு பிரிவு சாலைகளிலும் திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, சென்னை போன்ற ஊர்களுக்கு அரசு- தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
ஒரு வழி பாதை சாலை
இதனால் லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலையாக இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு லெட்சுமாங்குடி சாலை ஒரு வழி பாதை சாலையாக ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்து காவருக்கு நிழற்குடை
இதனால் லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களுக்கு சரியான சாலைகளில் சென்று வருவதற்கு ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் காவலர்கள் வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கு போதுமான வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் நின்று வாகனங்களை கவனிக்க வேண்டியதால், போக்குவரத்து காவலர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை நடு மையத்தில் போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.