திருச்சி
ஒரு செவ்வாழைத்தார் ரூ.1,000-க்கு ஏலம்
|ஒரு செவ்வாழைத்தார் ரூ.1,000-க்கு ஏலம் போனது.
வாழைக்காய் மண்டி
திருச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இருந்து பூவன், பச்ச நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாலி, மொந்தன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்து வருகின்றனர்.
வாழைத்தார் முதிர்ச்சி அடைந்தவுடன் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் வாழைக்காய் மண்டிக்கும் கொண்டு வந்தும் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
செவ்வாழைத்தார் ரூ.1000
கடந்த மே மாதம் வாழைத்தாரின் விலை குறைவாக இருந்தது. இதில் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் விற்பனையானது. தற்போது திருச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளிமாவட்டங்களில் வாழைத்தார் விளைச்சல் குறைந்துள்ளதால், வாழைத்தார்களில் விலை உயர்ந்துள்ளது.
நேற்று திருச்சி பகுதியில் உள்ள வாழைக்காய் மண்டியில் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.600 முதல் ரூ.700 வரையிலும் ஏலம் போனது. இதில் அதிகபட்சமாக செவ்வாழைத்தார் ரூ.1000 வரை ஏலத்திற்கு சென்றது. ஏற்கனவே காய்கறி, தக்காளி, மீன் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வாழைத்தார்களின் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இது குறித்து வாழைக்காய் மண்டி வியாபாரிகள் கூறும் போது, கடந்த மே மாதம் வரை வாழைத்தார் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது வாழைத்தார் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வாழைத்தாரின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக செவ்வாழைத்தார் ரூ.1000-க்கு விற்பனையாகிறது. பொதுவாக இந்த மாதங்களில் வாழைத்தார் விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். இனி வரும் மாதங்களில் விளைச்சல் அதிகரித்து வாழைத்தாரின் விலை குறையும், என்றனர். வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.