ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
|ஆணவக்கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் தேவை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் ஒரு சமூகவிரோதக் கும்பல் நுழைந்து அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆசிக் என்பவரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளது. இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் படுகொலையைத் திட்டமிட்டவர்கள், கொலையாளிகளை ஏவியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில், புதுடெல்லியிலிருந்து தருமபுரி மண்டல செயலாளர் தம்பி தமிழ்அன்வர் மூலம் படுகொலையான தம்பி முகமது ஆசிக்கின் தந்தையைத் தொடர்புகொண்டு எனது துயரத்தைப் பகிர்ந்துகொண்டதோடு அவருக்கு ஆறுதல் கூறினேன். படுகொலை நடந்த தகவலறிந்ததும் இயக்கத்தோழர்கள் உடனே களமிறங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், கொலையாளிகளை உடனே கைதுசெய்யும்படி காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்திட செயலாற்றி வருகின்றனர்.
தலைமையகத்திலிருந்து துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, தலைமைநிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் சௌ. பாவேந்தன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் த.கு. பாண்டியன், கருப்பண்ணன் ஆகியோர் தோழமை சக்திகளோடு களத்திற்குச் சென்றுள்ளனர். படுகொலையான தம்பி முகமது ஆசிக்கின் தந்தை ஜாவித் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன், ஆறுதல் நிதியாக ரூபாய் 50,000/- வழங்கியுள்ளனர்.
மிகப்பெரும் இழப்பைச் சந்தித்துள்ள ஜாவித் குடும்பத்தினருக்கு நீதிகிட்டும் வரையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த இயக்கத்தின் முன்னோடிகள் அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுகிறேன். இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்வதுடன் அவர்களைப் பிணையில் வெளிவரவிடாமல் தடுத்து வழக்கை விரைந்து விசாரித்து தண்டிக்க வேண்டுகிறேன்.
இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் தேவை என்பதை மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசு ஆகியவற்றுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஆதிக்க சாதியவாதக் கும்பலின் இந்த 'பித்துநிலை உளவியல்' தற்போது தலித்துகளிடையேயும் பரவுவது வேதனைக்குரியது. இப்போக்கைத் தடுத்துநிறுத்த தமிழ்நாடுஅரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பளிக்கவும் வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.