சென்னை
மர்மநபர் கத்தியால் கிழித்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு
|குன்றத்தூர் அருகே மர்மநபர் கத்தியால் கிழித்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையை சேர்ந்த 18 வயது மாணவி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி குன்றத்தூரை அடுத்த கோவூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி, வகுப்பறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று பார்த்தபோது லுங்கி அணிந்து இருந்த மர்மநபர் ஒருவர் தன்னை துரத்தி வந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிழித்து விட்டு தப்பிச்சென்று விட்டதாகவும் கூறி தனது தோழி மூலம் அதே கல்லூரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவி கூறியது பொய் என்பது தெரியவந்தது. முதலாம் ஆண்டு படிக்கும் அவர், சக மாணவிகளுடன் சரியாக பேசாமல் இருந்ததும், 2 நாட்களாக கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது. கல்லூரியை விட்டு செல்ல முடிவு செய்து தனக்குத்தானே கையிலும், முகத்திலும் கத்தியால் கிழித்துக்கொண்டு மர்மநபர் தன்னை கத்தியால் கிழித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. அந்த மாணவியின் உறவினரை அழைத்து, அறிவுரை கூறி அவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.