சென்னை
தோழி வீட்டுக்கு சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
|தோழி வீட்டுக்கு சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி இறந்தார்.
சென்னை அம்பத்தூர் பானுநகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி. இவர்களது மகள் தனன்யா (வயது 8). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். தனன்யாவுடன் படிக்கும் சக மாணவியான கனுஷ்யாவின் தாயுடன், கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டது.
அம்பத்தூர் பால்பண்ணை அருகே உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கனுஷ்யாவின் தாய், கண்மணியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை கண்மணி, தனது மகள் தனன்யாவுடன் கனுஷ்யா வீட்டுக்கு சென்றார். கண்மணி, கனுஷ்யாவின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். சிறுமிகள் இருவரும் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தனன்யா, நீச்சல் குளத்தில் மூழ்கினார். உடனடியாக அவளை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், தனன்யா ஏற்கனவே நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுபற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.