கண்மாயில் சிக்கிய பள்ளி மாணவி... காப்பாற்ற குதித்த இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்
|தூத்துக்குடி அருகே, இரு இளம் பெண்கள் கண்மாயில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே, 9-ம் வகுப்பு பள்ளி மாணவி உட்பட இரு இளம் பெண்கள் கண்மாயில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகேயுள்ள மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மேனகா. ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர், அதே கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி என்பவர்களுடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றிருக்கிறார்.
அப்போது, கண்மாயின் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்த மாணவி, திடீரென நீரினுள் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம் பெண்கள் இருவரும் மாணவியை காப்பாற்ற சென்ற நிலையில், மாணவி மேனகா மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரும் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில், கல்லூரி மாணவி கனிச்செல்வியை அக்கம்பக்கத்தினர் நூலிழையில் காப்பாற்றியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.