சென்னை
ஆவடி அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு
|2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பருத்திப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி. இவருடைய மனைவி மலர். இருவரும் டாக்டர்களாக உள்ளனர். இவர்களுடைய மகன் லோக்நாத் (வயது 17).
திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் படித்து தேர்ச்சி பெற்ற லோக்நாத்தை, தற்போது பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக 2 மாதத்துக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்துள்ளனர்.
லோக்நாத் கால்பந்தாட்ட வீரர் என கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே எகிறி குதித்து விளையாடிக் கொண்டே இருப்பார் என தெரிகிறது.
நேற்று மாலை லோக்நாத், தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது நிலைதடுமாறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த லோக்நாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படு்த்தியது.