சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலி
|சென்னை மெரினா கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலியானார்.
சென்னை புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் அஷ்ரப் அலி (வயது 17). இவர் சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் டேனியல் என்பவருடன் வெற்றி நகர் அருகே உள்ள மெரினா கடலில் குளிப்பதற்காக சென்றார். கடலில் குளித்து கொண்டிருந்த போது அஷ்ரப் அலி கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கி மாயமானார்.
இதற்கிடையே நண்பனை காணாமல் கூச்சலிட்டு தேடிக் கொண்டிருந்த டேனியலின் அலறல் கேட்டு வந்த அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து அஷ்ரப் அலியை தேடி வந்தனர். இந்த நிலையில் அஷ்ரப் அலியின் உடல் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.